India Women vs England Women T20: ஆறுதல் கொடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் – 80 ரன்களுக்கு சுருண்ட இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது மும்பையில் நடக்கிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மஹிமா கவுருக்குப் பதிலாக, சார்லோட் டீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று இந்திய மகளிர் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கனிகா அகுஜா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டைட்டஸ் சாது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வேதா கிருஷ்ணமூர்த்தி: குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!
ஏற்கனவே முதல் போட்டியை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிடும். முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஸ்மிருதி மந்தனாவும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்களில் நடையை கட்டினார். தீப்தி சர்மா 0, ரிச்சா கோஷ் 4, பூஜா வஸ்த்ரேகர் 6, ஷ்ரேயங்கா பாட்டீல் 4, டைட்டஸ் சாது 2, சைகா இஷாக் 8 என்றூ வரிசையாக ஒவ்வொருவரும் ஒற்றைப்படை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து மகளிர் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சார்லோட் டீன், லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஃப்ரேயா கெம்ப் மற்றும் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரேகர், டைட்டஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளான், லாரன் பெல், சார்லோட் டீன்.