எல்லா டீமும் பாகிஸ்தானுக்கு வரும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? PCB தலைவர் கேள்வி
ஆசிய கோப்பையில் ஆடுவதற்காக மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு வரும்போது, இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.
IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்
ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆடுவதற்கு பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. கடந்த மாதம் கூட இதுகுறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாதம் இதுதொடர்பாக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி, ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு பாகிஸ்தானுக்கு வரும் மற்ற அணிகளுக்கெல்லாம் பாதுகாப்பு பிரச்னை இல்லை. இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? இந்தியா மட்டும் ஏன் பாதுகாப்பை பற்றி கவலைப்படுகிறது..? அப்படி பார்க்கப்போனால் ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்புவதில் எங்களுக்கும் தான் பாதுகாப்பு தொடர்பான சந்தேகம் இருக்கிறது. அடுத்த மீட்டிங்கில் இதை தெரிவிப்பேன் என்று நஜாம் சேதி தெரிவித்தார்.