IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், இந்த தொடரில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை ராகுல் டிராவிட் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான இந்த தொடரில் இந்த 2 போட்டிகளில் ஜெயித்த இந்தியா மற்றும் ஒரு போட்டியில் ஜெயித்த ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டன.
2004ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத ஆஸ்திரேலிய அணி, 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஜெயிக்கும் முனைப்பில் இந்தியாவிற்கு வந்தது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதற்கான முழு தயாரிப்புடன் வந்தது. சீனியர் ஸ்பின்னரான நேதன் லயனுடன், டாட் மர்ஃபி மற்றும் குன்னெமன் ஆகிய 2 இளம் ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை வீணடிக்காமல் மூவருமே சிறப்பாக பந்துவீசினர். நேதன் லயன் சீனியர் ஸ்பின்னர். அவர் சிறப்பாக பந்துவீசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்தியாவில் இதற்கு முன் பந்துவீசிய அனுபவமே இல்லாத டாட் மர்ஃபி மற்றும் குன்னெமன் ஆகிய 2 இளம் ஸ்பின்னர்களும் அருமையாக பந்துவீசினார்கள். முதல் டெஸ்ட்டில் அறிமுக ஸ்பின்னர் மர்ஃபி 7 விக்கெட் வீழ்த்தினார். 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய நேதன் லயன், 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் மர்ஃபி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.நேதன் லயன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கடைசி டெஸ்ட் போட்டி முடிந்து இந்திய அணி தொடரை வென்றபின் பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், நேதன் லயன் தலைமையிலான ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங் யூனிட் அருமையாக பந்துவீசியது. ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக லயன் சிறப்பாக பந்துவீசிவருகிறார். அந்த 2 இளம் ஸ்பின்னர்களும்(மர்ஃபி, குன்னெமன்) லயனுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து பந்துவீசினர்.
இந்தியாவிற்கு டெஸ்ட் ஆட வந்த பல வெளிநாட்டு அணிகள் கடந்த காலங்களில் ஒரேயொரு நல்ல ஸ்பின்னருடன் வரும். ஒரு ஸ்பின்னர் மட்டும் நன்றாக பந்துவீசுவார். மற்றவர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்குவார்கள். ஆனால் இந்த 2 இளம் ஸ்பின்னர்களும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்தின் ஸ்வான் - பனேசர் ஜோடிக்கு பிறகு இந்திய மண்ணில் வேறு எந்த வெளிநாட்டு ஸ்பின் ஜோடியும் அந்தளவிற்கு சிறப்பாக பந்துவீசியதில்லை என்று சிலர் கூறினார்கள். கடந்த 10 ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு ஸ்பின்னர்களில் இவர்கள் தான் பெஸ்ட் என்று ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டினார்.