IND vs AUS: கடைசி டெஸ்ட் போட்டி டிரா.. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2-1 என இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 2 நாட்கள் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடியது. உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். கவாஜா 180 ரன்களையும், கேமரூன் க்ரீன் 114 ரன்களையும் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை விளாசிய கில் 128 ரன்களையும், கோலி 186 ரன்களையும் குவித்தனர். பின்வரிசையில் சிறப்பாக ஆடிய அக்ஸர் படேல் 79 ரன்கள் அடிக்க, இந்திய அணி 571 ரன்களை குவித்தது.
4ம் நாள் ஆட்டத்தில் சில ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், 90ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாள் ஆட்டம் முழுவதையும் அந்த அணி ஆட, 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடிக்க, இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இதையடுத்து 2-1 என இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோற்றதால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்திய அணி முன்னேறியது.
கடைசி டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.