ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சதமடித்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷாஃபிக் சாதனை பட்டியலில் இணைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். இமாம் உல் ஹக் 157 ரன்களையும், அசார் அலி 185 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா (97), டேவிட் வார்னர் (68), மார்னஸ் லபுஷேன் (90) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (78) ஆகிய நால்வரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 459 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க - ICC WTC: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்டுக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்
17 ரன்கள் முன்னிலையுடன் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் அடிக்க, 5ம் நாள் ஆட்டம் முடிந்தது. அதனால் போட்டி டிராவில் முடிந்தது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (136) மற்றும் இமாம் உல் ஹக் (111) ஆகிய இருவருமே சதமடித்தனர். இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இமாம் உல் ஹக் ஆட்டநாயகன் விருதை வென்றார்
அப்துல்லா ஷாஃபிக் - இமாம் உல் ஹக் சாதனை:
2வது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் ஷாஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் சதமடித்ததன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இருவருமே சதமடித்த நான்காவது பாகிஸ்தான் தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன், 1997ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஆமீர் சொஹைல் (160) - இஜாஸ் அகமது (151) ஆகிய இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதமடித்தனர். அதன்பின்னர் 2001ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சயீத் அன்வர் (101) - டௌஃபிக் உமர் (104) ஜோடி சதமடித்தது. 3வதாக 2019ம் ஆண்டு ஷான் மசூத் (135) - அபித் அலி (174) ஜோடி சதமடித்தது. அதன்பின்னர் ஷாஃபிக் - இமாம் உல் ஹக் தொடக்க ஜோடி ஒரே இன்னிங்ஸில் சதமடித்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளனர்.
