Asianet News TamilAsianet News Tamil

PAK vs NZ: சதத்தை நோக்கி கான்வே - லேதம் ஆட்டம்..! 47 ஓவர்கள் பந்துவீசியும் விக்கெட் வீழ்த்த முடியாத பாகிஸ்தான்

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் அடிக்க, அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 165  ரன்கள் அடித்துள்ளது.
 

pakistan can not break new zealand opening partnership after bowling 47 overs in second day play of first test
Author
First Published Dec 27, 2022, 5:50 PM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26(நேற்று) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (7) மற்றும் 3ம் வரிசை வீரர் ஷான் மசூத்(3) ஆகிய இருவரும் ஸ்டம்பிங் ஆகி ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌத் ஷகீல் 22 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 196 ரன்களை குவித்தனர். 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அபாரமாக ஆடி சதமடித்த பாபர் அசாம் 161 ரன்களை குவிக்க, அகா சல்மான் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பாபர் அசாம், அகா சல்மானின் சதங்கள் மற்றும் சர்ஃபராஸ் அகமதுவின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. 

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிவருகின்றனர். 2ம் நாள் ஆட்டத்தில் 47 ஓவர்கள் பேட்டிங் ஆடியும் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமது, மிர் ஹம்சா, முகமது வாசிம், நௌமன் அலி ஆகிய பவுலர்கள் மாறி மாறி பந்துவீசியும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. 

PAK vs NZ: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை..! பாகிஸ்தானை வைத்து நியூசிலாந்து செய்த தரமான சம்பவம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமாக பந்துவீசி அசத்திய ரிஸ்ட் ஸ்பின்னர் அப்ரார் அகமது, 17 ஓவர்கள் பந்துவீசியும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் அடித்துள்ளது. டெவான் கான்வே 82 ரன்களுடனும், டாம் லேதம் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios