கைகுலுக்கல் சர்சையில் பாகிஸ்தான் அணியிடம் நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி மனம் மாறியுள்ளது. இதன்பிறகே பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடங்கியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் இந்திய வீரர்களிடம் கைகுலுக்க வேண்டாம் என கூறியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்
''ஆன்டி பைக்ராஃப்ட் நடந்து கொண்டது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே அவரை ஆசிய கோப்பையில் இருந்து அவரை மாற்ற வேண்டும். இல்லாவிடிவில் ஆசிய கோப்பையில் இருந்து விலகி விடுவோம்'' என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், நடுவர் தவறு செய்யவில்லை. அவரை நீக்க முடியாது என ஐசிசி தெரிவித்தது.
போட்டி தொடங்குவதில் தாமதம்
இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இன்று நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி அவசர நடவடிக்கைகளை தொடங்கியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஐசிசி ஆலோசனை நடத்தியது. இதனால் இன்றைய போட்டி தொடங்கும் நேரம் 8 மணியிலிருந்து 9 மணியாக நீட்டிக்கப்பட்டது.
போட்டி தொடக்கம்
இதன்பின்பு போட்டி 9 மணிக்கு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஹோட்டலில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்துக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்காமல் விளையாட மாட்டோம் என உறுதியாக இருந்த பாகிஸ்தான் எப்படி விளையாட சம்மதித்தது என்ற கேள்வி எழுந்தது.
மன்னிப்பு கேட்ட ஆன்டி பைக்ராஃப்ட்
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்கும் முடிவை ஐசிசி ஏற்கவில்லை. ஆனால் ஆன்டி பைக்ராஃப்ட் தனது செயலுக்கு பாகிஸ்தான் அணியின் மேனேஜர், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸதான் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
