- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்? PAK vs UAE போட்டி ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு!
ஆசிய கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்? PAK vs UAE போட்டி ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு!
Asia Cup Cricket 2025: ஆசிய கோப்பையில் இருந்து விலகும் முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக போட்டி 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025
ஆசிய கோப்பையில் இருந்து விலகும் முடிவில் இருந்து பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க கூடாது என இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் தெரிவித்து இருந்தார்.
இதனால் ஆண்டி பைக்ராஃப்டை மாற்றாமல் விளையாட மாட்டோம் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஐசிசி ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது தொடர்பாஅன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், பாகிஸ்தானை சமாதானப்படுத்த முடியும் என நம்புவதாகவும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக போட்டி ஒத்திவைப்பு
இதனால் இன்றைய போட்டி தொடங்கும் நேரம் 8 மணியிலிருந்து 9 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. விலகல் முடிவை அறிவிப்பதற்காக பிசிபி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போட்டி கைவிடப்படவில்லை என ஐசிசியும், ஒரு மணி நேரம் தாமதமாகும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் அறிவித்துள்ளன. இதற்கிடையில், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்குச் செல்ல ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானை சமாதானப்படுத்தும் ஐசிசி
முன்னதாக, பைக்ராஃப்டை மாற்றுவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்ததையடுத்து, ஆசிய கோப்பையில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க பாகிஸ்தான் தயாரானது.
பிசிபியின் இரண்டாவது மின்னஞ்சலையும் ஐசிசி நிராகரித்ததால், இன்று யுஏஇ-க்கு எதிரான முக்கியப் போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்தே, பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி அவசர நடவடிக்கைகளைத் தொடங்கியது. லாகூர் மற்றும் துபாயில் பரபரப்பான நகர்வுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
போட்டி நடுவர் மாற்றப்படுவாரா?
போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை மாற்ற முடியாது என்ற நிலைப்பாட்டில் ஐசிசி உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பைக்ராஃப்டை மாற்றாமல் விளையாட முடியாது என்பதில் பிசிபியும் உறுதியாக உள்ளது. லாகூரில் பிசிபியின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். இன்றைய போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகினால், ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றப்படும். அப்படி நடந்தால், யுஏஇ சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.