ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆப்கான் அணியின் தொடக்க வீரர்கள் மெதுவாக ஆடியதே தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் தன்சித் ஹசன் தமீம் 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பேட்டிங்கில் தடுமாறிய ஆப்கானிஸ்தான்
சைஃப் ஹாசன் 28 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். டோஹித் ஹிரிடோய் முக்கிமான 26 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தின் ரன் சேர்க்க தடுமாறியதுடன் விக்கெட்டையும் இழந்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே அந்த அணி வீரர் செடிகுல்லா அடல் டக் அவுட் ஆனார்.
சொதப்பிய முன்னணி வீரர்கள்
மந்தமாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 12 பந்துகளில் 5 ரன் மட்டுமே எடுத்து நாசும் அகமது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்பு குல்படின் நைப்பும் 16 ரன்னில் வெளியேறினார். இதன் பிறகு ஓரளவு சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் (31) முகமது நபி (15) அடுத்தடுத்து அவுட்டாக ஆப்கானிஸ்தான் அணி 77/5 என தத்தளித்தது. இதனால் அந்த அணி விரைவில் சுருண்டு விடும் என வங்கதேச பவுலர்கள் எதிர்பார்த்தனர்.
அஸ்மதுல்லா உமர்சாய் அதிரடி
ஆனால் பின்பு களமிறங்கிய ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா உமர்சாய் சிக்சர் மழை பொழிந்தார். அணியின் ஸ்கோர் 109 ரன்களை தொட்டபோது நன்றாக விளையாடிய அவர் 16 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன் அடித்து ஆட்டமிழந்தார். உடனே கரீம் ஜனத்தும் (6) வெளியேறியதால் ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கலில் சிக்கியது. அதன்பின்பு வந்த கேப்டன் ரஷித் கான் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்தார். ஆனால் ரஷித் கான் (13 பந்தில் 20) ஆட்டமிழந்ததும் ஆப்கான் அணியின் நம்பிக்கை தளர்ந்து போனது.
வங்கதேச அணி வெற்றி
கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நூர் அகமது 2 சிக்சர்கள் அடித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். அந்த ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கான ரேஸில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
