ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் முடிவில் இருந்து பாகிஸ்தான் அணி பின்வாங்கியுள்ளது. போட்டி நடுவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆசியக் கோப்பையை புறக்கணிக்கும் முடிவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை மாற்றாவிட்டால், ஆசியக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவோம் என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரித்திருந்தார். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் கை குலுக்காமல் திரும்பியிருந்தனர்.

ஐசிசியிடம் பாகிஸ்தான் வைத்த கோரிக்கை

இது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்தே பாகிஸ்தான் இப்படி முடிவு எடுத்திருந்தது. போட்டியின் டாஸ் சமயத்தில், பாகிஸ்தான் கேப்டனுக்கு கை கொடுக்க வேண்டாம் என்று இந்திய கேப்டனிடம் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் கூறியதாக பிசிபி குற்றம் சாட்டியது. அதன்படியே சூர்யகுமார் யாதவ் கை குலுக்குவதை தவிர்த்தார் என்பது பிசிபியின் வாதம். இதைத் தொடர்ந்தே போட்டி நடுவரை நீக்க வேண்டும் என்று பிசிபி கோரியது.

ஐசிசி நிராகரிப்பு

போட்டி நடுவரை நீக்கவில்லை என்றால் ஆசியக் கோப்பையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது. ஆனால், நடுவர் தவறு செய்யவில்லை. அவரை நீக்க முடியாது என ஐசிசி தெரிவித்தது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் சவால் விடுத்தது.ஆனால், ஆசியக் கோப்பையை புறக்கணித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐசிசி எச்சரித்தது. பெரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நிதி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்ததை அடுத்து, பிசிபி தனது கடுமையான முடிவிலிருந்து பின்வாங்கியது.

முடிவில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகினால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்தே பாகிஸ்தான் அணி விலகும் முடிவை கைவிட்டுள்ளது.ஆசியக் கோப்பையில் நாளை நடைபெறும் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் போட்டியிலும் ஆண்டி பைக்ராஃப்ட்தான் போட்டி நடுவராக உள்ளார்.

பாகிஸ்தானுக்கு வெற்றி கட்டாயம்

இந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டால், பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஓமனுக்கு எதிராக வெற்றி பெற்ற அந்த அணிக்கு தற்போது இரண்டு புள்ளிகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக வெற்றி பெறுவது அந்த அணிக்கு கட்டாயமாகும்.