தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்.
 

narayan jagadeesan shares his approach after his historic knock of 277 in vijay hazare trophy

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன், நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து வரலாற்று சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்து அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 277 ரன்களை குவித்து வரலாற்று சாதனை படைத்தார்.

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன் சிஎஸ்கே அணியிடமிருந்து கழட்டிவிடப்பட்ட நாராயண் ஜெகதீசன், விஜய் ஹசாரே தொடரில் மிகச்சிறப்பான ஃபார்மில் அசத்திவருகிறார். இந்நிலையில், அவர் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில் தனது அணுகுமுறை, ஃபிட்னெஸ், ஐபிஎல் குறித்த பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பேட்டி விவரத்தை பார்ப்போம். 

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

277 ரன்களை குவித்த இன்னிங்ஸூக்கு கிடைத்த பாராட்டுகள், புகழ்ச்சிகள் ஆகியவற்றை எல்லாம் விட, தொடர்ச்சியான சிறந்த பயிற்சி, எனது ஒழுக்கம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை நினைத்துத்தான் பெருமைப்படுகிறேன். அதுதான் முக்கியமான விஷயம் என கருதுகிறேன் என்றார்.

நடப்பு விஜய் ஹசாரே தொடரில் பேட்டிங் டெக்னிக், அணுகுமுறையில் செய்த மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெகதீசன், என்னை பொறுத்தமட்டில் மனநிலை தான் முக்கியம். பேட்டிங் டெக்னிக்கில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. நான் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் இப்படித்தான் அணுகவேண்டும் என்ற உறுதியுடனும் தெளிவுடனும் இருந்தேன். தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் களத்திற்கு சென்றேன். பொதுவாக ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் பேட்ஸ்மேன் மனநிலை மாற்றம் அடையும். அப்படி இல்லாமல் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு போட்டியிலும் சீரான மனநிலையுடனும் உறுதியுடனும் தெளிவான அணுகுமுறையுடன் ஆடினேன் என்றார் ஜெகதீசன்.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் தோனி மாதிரியான மிகப்பெரிய வீரர்களிடமிருந்து, ஆட்டத்தை எப்படி அணுகுவது, போட்டிகளுக்கு எப்படி தயாராவது என்றெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

ஃபிட்னெஸ் மற்றும் மனநிலையை பராமரிப்பது குறித்து பேசிய ஜெகதீசன், விளையாட்டில் சவால்கள் நிறைய இருக்கத்தான் செய்யும். விளையாட்டுத்துறையில் எளிதான பாதையை எதிர்பார்க்கமுடியாது. ஸ்கோர் செய்வதோ, விக்கெட் வீழ்த்துவதோ எளிதாக நடந்துவிடும் என்று நினைக்கமுடியாது. நன்றாக ஆடும்போது கொண்டாடப்படுவோம். சொதப்பும்போது விமர்சிக்கப்படுவோம். ஆனால் ஒரு விளையாட்டு வீரராக அனைத்து சூழல்களிலும் முடிந்தவரை ஒரே மாதிரி நிலையான மனநிலையுடன் இருக்கத்தான் முயற்சிப்போம் என்றார்.

ஒருநாள் போட்டியில் 277 ரன்கள். தொடர்ந்து 5 சதங்கள்.. வரலாற்று சாதனை படைத்த ஜெகதீசன்! கழட்டிவிட்டு கதறும் CSK

கிரிக்கெட்டில் பல வீரர்கள் தனக்கு ரோல் மாடலாக இருந்தாலும், தோனியும் கோலியும் தான் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றார்.

277 ரன்கள்  மற்றும் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தபின், ஐபிஎல்லில் எந்த அணியும் அவரை அணுகியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெகதீசன், ஒரு வீரராக எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி சிறப்பாக ஆடுவது மட்டுமே என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயம். என்னை எந்த அணி தேர்வு செய்யும் என்பது என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமல்ல. எனவே என் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயத்தில் தான் கவனம் செலுத்த முடியுமேதவிர, கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது என்று பதிலளித்தார்.

அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு கூறிய ஆலோசனையில், நாம் மாநில, தேசிய அணிக்கோ அல்லது ஐபிஎல்லிலோ தேர்வாவோமா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆடவேண்டும். தேர்வுகளில் கவனம் சென்றால், ஆட்டத்தை சரியாக ஆடமுடியாது. ஒருவேளை சரியாக ஆடவில்லை என்றால், அது மனதளவில் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே தேர்வை பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி சிறப்பாக ஆடவேண்டும் என்று அறிவுரை கூறினார் ஜெகதீசன்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios