விஜய் ஹசாரே தொடரில் 277 ரன்களை அடித்து அசத்தியுள்ளார் ஜெகதீசன். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார் ஜெகதீசன். 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் ஜெகதீசனின் அபாரமான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசியிருந்த தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன், இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 5வது சதமடித்து சாதனை படைத்தார். 5வது சதத்தை இரட்டை சதமாக அடித்து அசத்தினார்.

நான் பார்த்ததில் சிறந்த இன்னிங்ஸ்.. இவர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்! சூர்யகுமாருக்கு வில்லியம்சன் புகழாரம்

ஆந்திராவிற்கு எதிராக 114 ரன்கள், சத்தீஸ்கருக்கு எதிராக 107 ரன்கள், கோவாவுக்கு எதிராக 168 ரன்கள், ஹரியானாவுக்கு எதிராக 128 ரன்கள் என தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்த ஜெகதீசன், இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆடிவரும் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியபோது 277 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 416 ரன்களை குவித்தனர். சாய் சுதர்சன் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் இரட்டை சதமடித்தார். இரட்டை சதத்திற்கு பின்னரும் அபாரமாக ஆடி 277 ரன்களை குவித்தார். ஜெகதீசன் இரட்டை சதத்தால் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 506 ரன்களை குவித்து சாதனை படைத்தது.

இந்த இரட்டை சதத்தின் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 277 ரன்களை குவித்ததன் மூலம் லிஸ்ட் ஏ (சர்வதேச ஒருநாள் போட்டி உட்பட) கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்திருந்த ரோஹித் சர்மாவின் (264) சாதனையை முறியடித்துள்ளார் ஜெகதீசன்.

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சங்கக்கரா, ஆல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்திருந்தனர். அந்த சாதனையை கடந்த போட்டியில் சமன் செய்த ஜெகதீசன், தொடர்ச்சியாக 5வது சதத்தை அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

NZ vs IND: இந்தியாவிற்கு எதிராக ஹாட்ரிக்..! டி20 கிரிக்கெட்டில் 2வது ஹாட்ரிக்கை வீழ்த்தி டிம் சௌதி சாதனை

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணி ஜெகதீசனை விடுவித்த நிலையில், வரலாற்று சாதனை படைத்து சிஎஸ்கே அணியை வெட்கி தலைகுனிய வைத்துள்ளார்.