முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!
முறியடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த 264 ரன்கள் சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் 277 ரன்கள் அடித்து முறியடித்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் 141 பந்தில் 277 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜெகதீசன், விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி வரலாற்று சாதனை படைத்து, கிரிக்கெட் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் முறியடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் அடித்த சாதனையையும் முறியடித்துள்ளார் ஜெகதீசன்.
2014ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்கடுத்த அதிகபட்ச ஸ்கோர் மார்டின் கப்டில் அடித்த 237 ரன்கள். 50 ஓவரில் ஒரு அணி அடிக்கக்கூடிய சராசரி ஸ்கோரை தனது அதிகபட்ச ஸ்கோராக அடித்து அபார சாதனை படைத்தார் ரோஹித். அந்த சாதனையை இனிமேல் யாரும் முறியடிக்கவே முடியாது என்று கருதப்பட்டது.
ஆனால் விஜய் ஹசாரே தொடரில் அல்டிமேட் ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ஜெகதீசன், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 141 பந்தில் 25 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 277 ரன்களை குவித்து ரோஹித்தின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் (சர்வதேச ஒருநாள் மற்றும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்) அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெகதீசன் படைத்தார்.
மேலும் இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆந்திராவிற்கு எதிராக 114 ரன்கள், சத்தீஸ்கருக்கு எதிராக 107 ரன்கள், கோவாவுக்கு எதிராக 168 ரன்கள், ஹரியானாவுக்கு எதிராக 128 ரன்கள் என தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசியிருந்த ஜெகதீசன், இன்று அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆடிவரும் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியபோது 277 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குமார் சங்கக்கரா, ஆல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்திருந்தனர். அந்த சாதனையை கடந்த போட்டியில் சமன் செய்த ஜெகதீசன், தொடர்ச்சியாக 5வது சதத்தை அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.