IPL 2023: அந்த பையன் சூப்பர்..! ஓபனர்ஸ் நல்லா ஆடினாலும் வெற்றிக்கு அவங்கதான் காரணம்! கிரெடிட் கொடுத்த தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் வெற்றிக்கு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அருமையாக பந்துவீசியதுதான் காரணம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்தார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்பதால் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றியுடன் வெளியேறும் முனைப்பில் உள்ளார் தோனி. தோனிக்கு கோப்பையை வென்று கொடுத்து கௌரவமாக அனுப்பிவைக்கும் முனைப்பில் தான் சிஎஸ்கே அணி நிர்வாகமும் வீரர்களும் உள்ளனர்.
அதற்கேற்ப இந்த சீசனில் சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.
இந்த சீசனில் தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி ஆடாதது பின்னடைவாக இருக்கும் என்பதால் ஃபாஸ்ட்பவுலிங் பிரச்னையாக இருக்கும் என அஞ்சப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே, இலங்கையின் மதீஷா பதிரனா ஆகியோர் அபாரமாக பந்துவீசி அசத்திவருகின்றனர்.
சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி வீரர்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் சிஎஸ்கே பவுலர்கள். சன்ரைசர்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்தது அந்த அணி.
135 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 87 ரன்களை குவித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 35 ரன்களுக்கு அவுட்டாக, அபாரமாக ஆடி 77 ரன்களை குவித்த கான்வே கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அபாரமாக பந்துவீசியதுதான் காரணம் என்றார் கேப்டன் தோனி. போட்டிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, எனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இந்த காலக்கட்டத்தை என்ஜாய் செய்து ஆடிவருகிறேன். மதீஷா பதிரனாவின் பவுலிங் ஆக்ஷனை கணிப்பது அவசியம். நல்ல வேகம் மட்டுமல்லாது நல்ல வேரியேஷனும் கொண்டவர். மலிங்காவை போன்ற வித்தியாசமான பவுலிங் ஆக்ஷனை கொண்டவர் பதிரனா. ஆனால் துல்லியமான லைன் & லெந்த்திலும் வீசுகிறார்.
மைதானத்தில் ஈரப்பதம் இருக்காது என்று தெரியும். அதனால் யோசித்துக்கொண்டே தான் சேஸிங் செய்யும் முடிவை எடுத்தேன். ஆனால் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்தினர். டெத் ஓவர்களை ஃபாஸ்ட்பவுலர்களும் அருமையாக வீசினர் என்று தோனி தெரிவித்தார்.