Mohammed Shami 200 ODI Wickets: முகமது ஷமி குறைந்த பந்துகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை படைத்தார். வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் இந்தச் சாதனையைச் செய்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வியாழக்கிழமை 200 ஒருநாள் விக்கெட்டுகளைக் கடந்து, குறைந்த பந்துகளில் இந்த சாதனையை எட்டிய பந்துவீச்சாளர் ஆனார். ஷமி இந்த சாதனையை துபாயில் வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் செய்தார்.

முதல் முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆடிய ஷமி தனது ஃபார்மை நிரூபித்தார். அவரது அபார பந்துவீச்சின் காரணமாக, வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுலப இலக்கை சேஸ் செய்த இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் வெற்றியை எட்டியது. இப்போட்டியில் ஷமி தான் வீசிய 10 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சௌம்ய சர்க்கார், மெஹதி ஹசன் மிராஸ், ஜக்கர் அலி, தன்ஜிம் ஹசன் சகிப், தஸ்கின் அகமது ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார்.

104 ஒருநாள் போட்டிகளில், ஷமி 23.63 சராசரியுடன் 202 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் அவரது சிறந்த பந்துவீச்சு 7/57 ஆகும். ஷமி ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் அதிக ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது பந்துவீச்சாளராகவும் மாறியுள்ளார்.

அடுத்தடுத்து சதம்! சாதனைகளை தவிடுபொடி ஆக்கிய இளரவசன் சுப்மன் கில்!

ஐசிசி போட்டிகளில் அசத்தும் ஷமி:

ஜாகீர் கானை (59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஷமி இதுவரை ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 60 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பையில், அவர் 18 போட்டிகளில் 13.52 சராசரியுடன் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் அவரது சிறந்த பந்துவீச்சு 7/57. நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்போது தனது முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், ஆடிய ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சும் இதுதான். இந்திய பவுலர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 2013 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5/36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்டார்க்கை முந்தி சாதனை:

பந்துகளின் அடிப்படையில், ஷமி வெறும் 5,126 பந்துகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை அள்ளிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைத் தன்வசமாக்கினார். 5,240 பந்துகளில் இந்த சாதனையை எட்டிய ஆஸி. அணியின் மிட்செல் ஸ்டார்க்கை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

குறைவான போட்டிகளின் 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய வேகமான பந்துவீச்சாளர்களில் ஷமி இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக்குடன் (104 போட்டிகள்) சமநிலையில் உள்ளார். ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் 102 போட்டிகளில் 200 விக்கெட்டுகளைச் சாய்த்து முதலிடத்தில் உள்ளார்.

அமர்க்களமாகத் தொடங்கிய இந்திய அணி! வங்கதேசத்துக்கு எதிராக அபார வெற்றி!