Shubman Gill: துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியாவின் துணை கேப்டன் சுப்மன் கில் தனது 8வது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், துபாய் சர்வதேச மைதானத்தில் பிப்ரவரி 20 அன்று வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார்.
ஷுப்மன் கில் 129 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கில் தனது 8வது ஒருநாள் சதத்தை எட்டியுள்ளார்.
99 ரன்களில் இருந்தபோது, தக்சின் அகமதுவின் பந்தை கவர் திசையில் தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்து சதத்தை நிறைவு செய்தார். அவர் சதம் அடித்ததும், அணியினரும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுப்மன் கில்லின் நிதானமான ஆட்டம் இந்திய அணியில் ரன்சேஸுக்கு முதுகெலும்பாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் துணை கேப்டனின் நிலையான ஆட்டத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி 3 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 259 ரன்கள் (சராசரி 86.22) எடுத்தார்.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் திகழ்கிறார் சுப்மன் கில். அவர் 2022 முதல் 14 சதங்களை விளாசியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (13), இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (11) ஆகியோர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.
சுப்மன் கில் சதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டு:
