ICC ODI World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான புதிய போஸ்டர் வெளியீடு!
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடருக்கான புதிய போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த மாதம் 5 ஆம் தேதி 13 ஆவது உலகக் கோப்பை பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை. வரும் 28 ஆம் தேதி தான் வீரர்களை உறுதி செய்வதற்கான கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி நடக்கிறது. இதற்காக தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இந்தியா வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நேற்று புறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியா வருவதற்கான விசா கடைசி நேரத்தில் கிடைத்துள்ளது. வரும் 29 ஆம் தேதி பாகிஸ்தான், ஹைதராபாத் வருகிறது.
இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான புதிய போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 10 அணிகளின் கேப்டன்கள் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா உள்ளிட்ட சிலர் கையில் பேட் வைத்திருப்பது போன்றும் ஜோஸ் பட்லர் கையில் கீப்பிங் குளோஸ் அணிந்திருப்பது போன்றும், தசுன் ஷனாகா மற்றும் ஷாகிப் அல் ஹசன் பீல்டிங்கில் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.