இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ரஹானே தான் அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். அதனால் இந்திய அணி வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அபாரமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து புஜாரா 11 ரன்னிலும் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வாலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். 

ஒருமுனையில் பிரித்வி ஷா, புஜாரா, கோலி ஆகியோர் ஆட்டமிழந்தாலும், ஜாமிசன், சௌதி, டிரெண்ட் போல்ட் ஆகியோரின் அபாரமான ஃபாஸ்ட் பவுலிங்கை முதல் செசன் முழுவதும் திறமையாக எதிர்கொண்டு ஆடிய மயன்க் அகர்வால், சவாலான கண்டிஷனில் அபாரமான பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் செசன் முழுவதும் ஆடினார். இரண்டாவது செசனில் தான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் ஆடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை மயன்க் அகர்வால் படைத்துள்ளார். நியூசிலாந்தில் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் ஆடுவது அவ்வளவு கடினமான விஷயம். அதை திறம்பட செய்தார் மயன்க் அகர்வால். இதற்கு முன்னதாக 1990ல் நேப்பியரில் நடந்த போட்டியில் இந்திய வீரர் மனோஜ் பிரபாகர், முதல் நாளின் முதல் செசன் முழுவதும் ஆடியிருக்கிறார். அவருக்கு அடுத்து அந்த சாதனை சம்பவத்தை செய்தது மயன்க் அகர்வால் தான். 

Also Read - துல்லியமான வேகத்தில் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்த சௌதி.. அதிர்ந்து நின்ற அஷ்வின்.. அருமையான பவுலிங்.. வீடியோ

இந்திய டெஸ்ட் அணியின் ஆல்டைம் பெஸ்ட் தொடக்க வீரரான சேவாக் கூட இந்த சம்பவத்தை செய்ததில்லை.