இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 165 ரன்களுக்கு சுருண்டது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கோலி மற்றும் புஜாரா முறையே 2 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் சரியாக ஆடாததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. ரஹானே தான் அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அறிமுக ஃபாஸ்ட் பவுலர் ஜாமிசன் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை 165 ரன்களுக்கு சுருட்டினர். 

ஜாமிசன் மற்றும் சௌதி ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசினர். புஜாரா, கோலி, ஹனுமா விஹாரி மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய நால்வரையும் ஜாமிசன் வீழ்த்தினார். பிரித்வி ஷா, ரஹானே, அஷ்வின், ஷமி ஆகிய நால்வரையும் சௌதி வீழ்த்தினார். 

இதில் சௌதி, அஷ்வினின் விக்கெட்டை வீழ்த்திய பந்து அபாரமானது. ரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த அஷ்வின், முதல் பந்திலேயே போல்டானார். களத்திற்கு புதிதாக வந்த பேட்ஸ்மேனுக்கு முதல் பந்தையே இவ்வளவு துல்லியமாக வீசினால், எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆடுவது கடினம் தான். சரியான லைன் அண்ட் லெந்த்தில் மிக துல்லியமாக வீசினார் சௌதி. அந்த பந்தை பேட்டில் கூட தொடமுடியாமல் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் அஷ்வின். கிளீன் போல்டான அஷ்வின், சௌதியின் துல்லியமான பந்தைக்கண்டு வியந்து நின்றார். அந்த வீடியோ இதோ.. 

இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களையும் டெய்லர் 44 ரன்களையும் விளாசி ஆட்டமிழந்தனர். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இந்திய அணியின் ஸ்கோரை முந்தி, முன்னிலையுடன் ஆடிவருகிறது. டாம் லேதமை 11 ரன்களிலும் பிளண்டெலை 30 ரன்களிலும் டெய்லரை 44 ரன்களிலும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை ஷமி வீழ்த்தினார். 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்து நியூசிலாந்து அணி ஆடிவருகிறது. ஹென்ரி நிகோல்ஸும் வாட்லிங்கும் களத்தில் உள்ளனர்.