Asianet News TamilAsianet News Tamil

தன் கேட்ச்சை பிடிக்கவிடாமல் மார்க் உட்டை கையை நீட்டி தடுத்த மேத்யூ வேட்..! மிக மட்டமான செயல்.. வைரல் வீடியோ

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் மேத்யூ வேடின் மட்டமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

matthew wade obstructing mark wood when he attempting for catch in australia vs england first t20
Author
First Published Oct 9, 2022, 8:52 PM IST

பொதுவாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் அணியின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போனவர்களே அவர்கள் தான். வீழ்த்த முடியாத வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, மனரீதியாக அவர்களை நிலையாக இருக்கவிடாமல் செய்து வீழ்த்தும் உத்தியில் அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.

ஸ்லெட்ஜிங், பால் டேம்பரிங் என வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தவர்கள் ஆஸ்திரேலியர்கள். எதிர்கொள்ள கடினமான பவுலர்களின் பவுலிங் ஆக்‌ஷனை சந்தேகத்திற்குட்படுத்தி அவர்களை பரிசோதிக்க வைப்பவர்கள். அதீத திறமையான அசாதாரணமான பவுலர்களை திறமையை வளர்த்துக்கொண்டு சிறப்பாக ஆடி அவர்களை வீழ்த்த நினைக்காமல், எதிரணி திறமைசாலிகளின் கெரியரையே காலி செய்ய வேண்டும் என்ற குறுக்குப்புத்தி கொண்டவர்கள். 

இதையும் படிங்க - வார்னரின் போராட்டம் வீண்.. டி20 உலக கோப்பைக்கு முன் ஆஸி., மண்ணில் ஆஸி.,யை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

அதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 208 ரன்களை குவிக்க, 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ வேட் 15 பந்தில் 21 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 17வது ஓவரை மார்க் உட் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை பவுன்ஸராக வீசினார் மார்க் உட். அதை வேட் அடிக்க, பந்து அங்கேயே உயரே எழும்பியது. விக்கெட் கீப்பர் பட்லர் மற்றும் பவுலர் மார்க் உட் இருவருமே அந்த பந்தை கேட்ச் பிடிக்க ஓடிவந்தனர். பந்து எங்கே சென்றது என்பதை அறியாத வேட் ரன் ஓட முயற்சித்து இரண்டு அடி முன்னே சென்றார். பின், மார்க் உட் ஓடிவருவதை பார்த்து, மீண்டும் க்ரீஸை நோக்கி ஓடிவந்தார். அப்போது மார்க் உட் ஏதோ ஒருவகையில் தன்னை அவுட்டாக்க(கேட்ச் பிடிக்கத்தான் வருகிறார் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை) ஓடிவருகிறார் என்பதை தெரிந்துகொண்டு கையை நீட்டி மார்க் உட்டை மறைத்தார்.

இதையடுத்து பட்லர், மார்க் உட் உட்பட மொத்த இங்கிலாந்து அணியும் அதிருப்தியடைந்தது. ஆனால் அம்பயரிடம் அப்பீல் செய்யவில்லை. ஒருவேளை அப்பீல் செய்திருந்தால் விதிப்படி வேட் அப்போதே ஆட்டமிழந்திருப்பார். மேத்யூ வேடின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் வேட் மீது தவறான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க - 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ரசிகர்கள் மேத்யூ வேடின் செயலையும், பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் தன்மைகள் மற்றும் செயல்பாடுகளையும் விமர்சித்துவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios