டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

TNPL 2025: Lyca Coimbatore Kings beat Nellai Royal Kings: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரின் 18வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திருநெல்வேலியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.

லோகேஷ்வர் அதிரடி அரை சதம்

தொடக்க வீரர் எஸ். லோகேஷ்வர் தனது அபார ஆட்டத்தால் 57 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 90 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது லோகேஷ்வரின் ஆறாவது டிஎன்பிஎல் அரை சதம் மற்றும் இந்த சீசனின் முதல் அரை சதம் ஆகும். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

கேப்டன் ஷாருக்கான் அதிரடி

கேப்டன் ஷாருக்கான் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் எடுத்தார். ஜிதேந்திர குமார் 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில், இம்மானுவேல் செரியன் பந்துவீச்சில் அஜிதேஷ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாலசுப்பிரமணியம் சச்சின் 14 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரே சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். குரு ராகவேந்திரன் மற்றும் மாதவா பிரசாத் ஆகியோர் தலா 0 மற்றும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நெல்லை பவுலிங் எப்படி?

நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், சோனு யாதவ் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கேய் பர்பில் கேப் பட்டியலில் அபிஷேக் தன்வாருடன் (சிஎஸ்ஜி) முதலிடத்தைப் பிடித்தார். மேலும், டிஎன்பிஎல் வரலாற்றில் 75 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

பேட்டிங்கில் தடுமாறிய நெல்லை

சச்சின் ரதி 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இம்மானுவேல் செரியன் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். வல்லியப்பன் யுதிஸ்வரன் 4 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். பின்பு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது.

கோவை அபார பந்துவீச்சு

கேப்டன் அருண் கார்த்திக் (4), சந்தோஷ் குமார் (7), ஹரீஸ் (4), ஆதீஷ் (1) என நெல்லை வீரர்கள் களத்துக்கு வருவதும் உடனடியாக அவுட்டாகி பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். இந்த சரிவில் இருந்து இறுதி வரை அந்த அணியால் மீள முடியவில்லை. சோனு யாதவ் (23), முகமது கான் (26) ஆகியோர் இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கோவை அணி முதல் வெற்றி

படுமோசமாக விளையாடிய நெல்லை அணி 17.5 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. கோவை அணி தரப்பில் திவாகர் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். புவனேஷ்வரன், கபிலன், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 5வது ஆட்டத்தில் விளையாடிய நெல்லை அணிக்கு இது 2வது தோல்வியாகும். அதே வேளையில் 5வது ஆட்டத்தில் விளையாடிய கோவை அணி இப்போது தான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.