SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
TNPL 2025 Chepauk Super Gillies Beat SKM Salem Spartans: தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் அபிஷேக் 38 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்கள் விளாசினார். ஹரி நிஷாந்த் 28 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். சன்னி சந்து 18 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
முகமது கடைசிக் கட்டத்தில் 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ராஜகோபால் (7 ரன்), ஆர் கவின் (1), ராஜேந்திரன் விவேக் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் தரப்பில் பிரேம் குமார் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். அபிஷேக் தன்வார், சிலம்பரசன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஆஷிக் அரை சதம்
பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆஷிக், மோகித் ஹரிஹரன் அதிரடியில் பட்டய கிளப்பி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். மோகித் ஹரிஹரன் 22 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சூப்பர் அரைசதம் விளாசிய ஆஷிக் 36 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினார்.
நாராயண் ஜெகதீசன் அதிரடி
பின்பு களமிறங்கிய நாராயண் ஜெகதீசனும் அற்புதமாக விளையாடினார். 25 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடனும் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்பு வந்த கேப்டன் பாபா அபராஜித் (10 ரன்), ஸ்வப்னில் சிங் (2) வெற்றியை உறுதி செய்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெறும் 16.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வீழ்த்த முடியாத அணியாக வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேலம் தரப்பில் ஹரி நிஷாந்த், முகமது, பொய்யாமொழி, கார்த்திக் மணிகண்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். 5வது ஆட்டத்தில் விளையாடும் சேலத்துக்கு இது 2வது தோல்வியாகும். அந்த அணி 6 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் 5வது ஆட்டத்தில் விளையாடும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று கெத்தாக முதலிடத்தில் அமர்ந்துள்ளது.
