TNPL 2025 SMP vs NRK : டிஎன்பிஎல் 2025 தொடரின் 16ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
டிஎன்பிஎல் 2025:
TNPL 2025 SMP vs NRK :நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இடம் பெற்ற 8 அணிகளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மட்டுமே விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி
நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 2 வெற்றிகளுடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் டிஎன்பிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி
அதன்படி சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அரவிந்த் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் என் எஸ் சதுர்வேத் 1 ரன்னிலும், ஷியாம் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அப்போது மதுரை பாந்தர்ஸ் அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பாலசந்தர் மற்றும் ஆதிக் உர் ரஹ்மான்
பின்னர் பாலசந்தர் மற்றும் ஆதிக் உர் ரஹ்மான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் அனிருத் 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆதிக் 36 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த பினவரிசை வீரர்கள் ஓரளவு ரன்கள் எடுக்க சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
சோனு யாதவ் 3 விக்கெட்டுகள்
நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும், யுதீஸ்வரன் மற்றும் இம்மானுவேல் செரியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து தற்போது நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்து வருகிறது.
இதில், தொடக்க வீரர் அஜிதேஷ் குருசாமி 0 ரன்னில் ஆட்டமிழக்க, சந்தோஷ் குமார் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். தற்போது வரையில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 6 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.