IPL 2023: ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது எப்படி..? நொண்டிச்சாக்கு சொல்லும் கேஎல் ராகுல்
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட முடியாமல் விரட்ட தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் இந்த சீசனில் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் வலுவான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவரும் மட்டுமே நன்றாக ஆடினர். சஹா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். அரைசதம் அடித்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்தில் 66 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
லக்னோ ஆடுகளம் ஸ்லோவாக இருந்ததால் பேட்டிங்கிற்கு சவாலாக இருந்தது. அதனால் இந்த ஸ்கோரை வைத்தே சவாலளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் 2வது இன்னிங்ஸில் பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த வேலையை செவ்வனே செய்தது.
136 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - கைல் மேயர்ஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 55 ரன்கள் அடித்தனர். கைல் மேயர்ஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய க்ருணல் பாண்டியா மந்தமாக ஆடி 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். 10 ஓவரில் 80 ரன்கள் அடித்திருந்த லக்னோ அணி, அதன்பின்னர் மந்தமாக ஆடியது. மந்தமாக பேட்டிங் ஆடிய க்ருணல் பாண்டியா 15வது ஓவரில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பூரன் ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, அதன்பின்னர் ஆயுஷ் பதோனி களமிறங்கினார். களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்த ராகுல், மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தியிருந்தால் விரைவில் இலக்கை எட்டி ஆட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்ற ராகுல் 68 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் ராகுலை 2வது பந்தில் வீழ்த்தினார் மோஹித். அதற்கடுத்த 3வது பந்திலேயே மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆயுஷ் பதோனி மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் ரன் அவுட்டாக, 20 ஓவரில் 128 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது லக்னோ அணி. 135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ அணி, கையில் இருந்த ஆட்டத்தை கோட்டைவிட்டு 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த தோல்விக்கு பின் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல், என்னை நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் நடந்துவிட்டது. எங்கே தவறு நடந்தது என்பதை சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை. ஆனால் 2 புள்ளிகளை இன்று இழந்துவிட்டோம். இதுதான் கிரிக்கெட். எங்கள் பவுலிங் சிறப்பாக இருந்தது. 135 ரன்களுக்கு குஜராத்தை கட்டுப்படுத்திவிட்டோம். பேட்டிங்கிலும் நன்றாகத்தான் தொடங்கினோம்.
நான் கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. எனது ஷாட்டுகளை ஆடத்தான் முயற்சித்தேன். ஆனால் நூர் அகமது மற்றும் ஜெயந்த் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்தினர். மிடில் ஓவரில் 2-3 ஓவர்களை அருமையாக வீசினர். விக்கெட்டுகள் கையில் நிறைய இருந்த நிலையில், மிடில் ஓவர்களில் சில சான்ஸ்களை எடுத்து பெரிய ஷாட் ஆடியிருக்க வேண்டும். பவுண்டரி வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். குஜராத் பவுலர்கள் அருமையாக பந்துவீசினர் என்று கேஎல் ராகுல் தெரிவித்தார்.