இந்தியா - நியூசிலாந்து இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. 

இந்த தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 3-0 என வென்றுவிட்டது. நியூசிலாந்தில் முதன்முறையாக டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி 5-0 என ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பிலும் அடுத்த 2 போட்டிகளிலும் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளன. 

இந்நிலையில், நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். மூன்றாவது போட்டியில் வில்லியம்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த போட்டியில் வெறும் 48 பந்தில் 95 ரன்களை குவித்த வில்லியம்சன், கடைசி ஓவரில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. அவர் அவுட்டான பின், எஞ்சிய 3 பந்தில் 2 ரன்கள் அடிக்க முடியாமல் அந்த அணி தோற்றது. 

Also Read - இந்திய அணியில் எதிர்பாராத மாற்றங்கள்.. தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்

ஆட்டநாயகன் விருதை அந்த போட்டியில் வென்றிருக்க வேண்டிய வில்லியம்சன், ஷமியின் அபாரமான கடைசி ஓவரால் இழந்தார். அதன்பின்னர் போட்டி டை ஆனதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டு, ரோஹித் சர்மா கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 

கடந்த போட்டியில் அபாரமாக ஆடியும் அணிக்கு வில்லியம்சனால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியாமல் போனது. எனவே அடுத்த 2 போட்டிகளிலும் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் முனைப்பில் வில்லியம்சன் இருக்கிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெறும் 31 ரன்கள் அடித்தால், வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிவிடுவார். 

Also Read - சர்வதேச கிரிக்கெட்டில் மற்றுமொரு மைல்கல்.. ரோஹித்துக்கு வெறும் 31 ரன்களே தேவை

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கேப்டனாகவும் திகழும் வில்லியம்சன், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 1243 ரன்களை இதுவரை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், கேப்டனாக 1273 ரன்களை குவித்திருக்கிறார். எனவே டுப்ளெசிஸை விட வெறும் 30 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கும் வில்லியம்சன், இன்னும் 31 ரன்கள் அடித்தால், டுப்ளெசிஸை பின்னுக்குத்தள்ளி, டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் படைப்பார்.