தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்
ஐசிசி உலக கோப்பைகளை வெல்வதுதான் முக்கியம் என்றால், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மாதிரியான அணிகளுக்கு தடை தான் விதிக்க வேண்டும் என்று, ஐசிசி கோப்பையை வெல்வது மட்டுமே முக்கியமல்ல என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணிக்கு தோனி டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தார்.
2013ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் ஜெயிக்கவில்லை. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது. 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது.
2014, 2016 டி20 உலக கோப்பைகளில் தோற்ற இந்திய அணி மீது 2021ல் நடந்த டி20 உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கோலி கேப்டன்சியில் அந்த தொடரில் அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறிய இந்திய அணி, 2022 டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று ஏமாற்றமளித்தது.
அதனால் ஐசிசி கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்பு நீடிக்கிறது. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு உருவாகியுள்ளது. அதனால் அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. கேப்டன் தோனிக்கு பிறகு 2013ம் ஆண்டுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கேப்டனும் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை ஜெயித்து கொடுக்கவில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிறது. 10 ஆண்டுகளாக ஒரு உலக கோப்பையைக்கூட ஜெயிக்காதது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐசிசி உலக கோப்பையை ஜெயிப்பது மட்டுமே கிரிக்கெட் அல்ல என்பதை உணர்த்தும் விதமாக இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல்.
இதுகுறித்து பேசிய காம்ரான் அக்மல், இந்திய அணி 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்று பேசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது. ஐசிசி கோப்பையை ஜெயிப்பது மட்டுமே முக்கியம் என்றால், இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை ஜெயித்திராத தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய அணி மிகச்சிறந்த கிரிக்கெட் அணி என்று காம்ரான் அக்மல் கருத்து கூறியுள்ளார்.