NED vs ENG: பிட்ச்சுக்கு வெளியே போன பந்தை கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிய பட்லர்..! வைரல் வீடியோ
நெதர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பிட்ச்சுக்கு வெளியே சென்ற பந்தை விடாமல் விரட்டிச்சென்று பட்லர் சிக்ஸர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை 3-0 என வென்றது இங்கிலாந்து அணி.
இந்த தொடரில் அபாரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் தான் தொடர் நாயகன் விருதை வென்றார். 3வது ஒருநாள் போட்டியில் பட்லர் செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 70 பந்தில் 162 ரன்களையும், 3வது போட்டியில் 64 பந்தில் 86 ரன்களையும் குவித்தார் பட்லர். 2வது போட்டியில் அவர் பேட்டிங் ஆடவில்லை. 2 போட்டியிலும் சேர்த்து மொத்தமாக 19 சிக்ஸர்களை விளாசினார்.
முடிந்தவரை ஒவ்வொரு பந்தையுமே சிக்ஸர் அடிக்க முயன்றார் பட்லர். அந்தவகையில், 3வது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து நிர்ணயித்த 245 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியபோது, பேட்டிங் ஆடிய பட்லர் 29வது ஓவரில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு சிக்ஸரை அடித்தார்.
இதையும் படிங்க - ரஞ்சி ஃபைனலில் சதமடித்த சர்ஃபராஸ் கான்.. உணர்ச்சி பெருக்கில் கண்ணீருடன் சதத்தை கொண்டாடிய வைரல் வீடியோ
29வது ஓவரை பால் வான் மீகெரென் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை ஸ்லோ பவுன்ஸராக வீச நினைத்தார். ஆனால் பந்தை அவரது காலுக்கு கீழே பிட்ச் செய்ததால் மேலெழுந்த அந்த பந்து பேட்ஸ்மேனுக்கு லெக் திசையில் பிட்ச்சுக்கு வெளியே சென்று இரண்டாவது பிட்ச் ஆனது. ஆனால் அந்த பந்தையும் விடாமல் விரட்டிச்சென்று சிக்சர் அடித்தார் பட்லர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பந்து பிட்ச்சுக்கு வெளியே சென்றதால் அதற்கு நோ பால் கொடுக்கப்பட்டது.