ரஞ்சி ஃபைனலில் சதமடித்த சர்ஃபராஸ் கான்.. உணர்ச்சி பெருக்கில் கண்ணீருடன் சதத்தை கொண்டாடிய வைரல் வீடியோ
ரஞ்சி தொடரின் ஃபைனலில் சதமடித்த சர்ஃபராஸ் கான் உணர்ச்சி பெருக்கில் கண்ணீருடன் சதத்தை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ரஞ்சி தொடரில் அபாரமாக விளையாடி சதங்களை குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றுவருகிறார்.
முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். இந்த ஆண்டு நடந்துவரும் ரஞ்சி தொடரில் ஏற்கனவே 3 சதங்களை விளாசிய சர்ஃபராஸ் கான், ஃபைனலிலும் சதம் விளாசியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் ஃபைனலில் மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் ஆடிவருகின்றன. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது.
வழக்கம்போலவே அபாரமாக பேட்டிங் ஆடிய சர்ஃபராஸ் கான் இந்த போட்டியிலும் சதமடித்தார். 134 ரன்களை குவித்தார் சர்ஃபராஸ். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 78 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.
இந்த ரஞ்சி தொடரில் 4வது சதத்தை பதிவு செய்த சர்ஃபராஸ் கான், உணர்ச்சிமயத்தில் கண்ணீர் விட்டு சதத்தை கொண்டாடினார். பின்னர் தவானை போன்று தொடையில் தட்டி சதத்தை கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் இது சர்ஃபராஸின் 8வது சதம். இதற்கு முன் அடித்த 7 சதங்களிலும், 150 ரன்களை கடந்து சர்ஃபராஸ் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.