ஸ்மிருதி மந்தனா அதிரடி: வெஸ்ட் இண்டீஸை காலி செய்து புள்ளிப் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம்!
நேற்று நடந்த முத்தரப்பு டி20 தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய பெண்கள் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பெண்களுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த 3ஆவது போட்டியில் இந்திய பெண்கள் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய பெண்கள் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி கடைசி வரையில் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். யாஸ்திக பாடியா 18 ரன்னிலும், ஹர்டின் தியோல் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 56 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் 74 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனைகள் வில்லியம்ஸ் மற்றும் கூப்பர் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாம்பெல்லே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியாக போஸ் கொடுக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 பெண்கள் அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா 2 போட்டியில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா 2 போட்டியில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்து 3ஆவது இடத்தில் உள்ளது.
நாளை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா பெண்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியும் மோதுகின்றன.