ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் உம்ரான் மாலிக் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
இலங்கை அணி:
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நுவானிது ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஆஷன் பண்டாரா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, ஜெஃப்ரி வாண்டர்சே, சாமிகா கருணரத்னே, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் விராட் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 131 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி சதமடித்த ஷுப்மன் கில் 97 பந்தில் 14 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லின் 2வது சதமாகும்.
கில்லை தொடர்ந்து அபாரமாக ஆடிய விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 46வது சதம் இதுவாகும். சதத்திற்கு பின் காட்டடி அடித்தார் கோலி. 43வது ஓவரில் சதமடித்த கோலி, அதன்பின்னர் 66 ரன்களை குவித்தார். சதமடித்த பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் கோலி. 110 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 166 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று சிறப்பாக இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். கோலியின் மெகா சதம் மற்றும் கில்லின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 390 ரன்களை குவித்தது இந்திய அணி.
391 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்ட தொடங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியின் டாப் 3 வீரர்களான அவிஷ்கா ஃபெர்னாண்டோ (1), நுவானிது ஃபெர்னாண்டோ (19), குசால் மெண்டிஸ்(4) ஆகிய மூவரையுமே சிராஜ் வீழ்த்தினார். சாரித் அசலங்கா ஒரு ரன்னில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா 19 ரன்னில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் அவுட்டானார்.
வனிந்து ஹசரங்காவை ஒரு ரன்னுக்கு வீழ்த்திய சிராஜ், கருணரத்னேவை ரன் அவுட் செய்தார். வெல்லாலகே ஒரு ரன்னில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வீரராக லஹிரு குமாரா குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழக்க, பண்டாரா காயம் காரணமாக பேட்டிங் ஆடவில்லை. எனவே வெறும் 73 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழக்க, 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.
317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இன்று பெற்ற வெற்றிதான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன், ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. நியூசிலாந்தின் அந்த சாதனையை முறியடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து, வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய அணி.