ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ஓவரில் 136 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழையால் பலமுறை தடைபட்ட இந்த போட்டி தலா 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 26 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றி இலக்கு 131 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது.
கடைசியில் இந்தியா அதிரடி
மழையால் நான்காவது முறையாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது 16.4 ஓவர்களில் 52-4 என்ற நிலையில் இருந்த இந்தியா, கடைசி 10 ஓவர்களில் 86 ரன்கள் குவித்து 136 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் இந்தியாவின் அதிகப்பட்ச ரன்கள் அடித்தார். அக்சர் படேல் 38 பந்துகளில் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்தனர்.
ஹேசில்வுட், குனேமன் நல்ல பவுலிங்
கடைசி ஓவரில் மேத்யூ குனேமனுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்கள் உட்பட 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டி, இந்திய இன்னிங்ஸ் 130 ரன்களைக் கடக்க முக்கியப் பங்காற்றினார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ குனேமன், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரோகித், கோலி ஏமாற்றம்
இந்த போட்டியின் மூலம் 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மாவும், விராட் கோலியும் எளிதாக விக்கெட்டை தாரை வார்த்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். ரோகித் சர்மா 14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ரன் மட்டுமே அடித்து ஹேசில்வுட் பந்தில் ரென்ஷாவிடம் கேட்ச் ஆனார். இதேபோல் 8 பந்துகளை சந்தித்த விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் கோனோலியின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார்.
அடிக்கடி புகுந்த மழை
இந்த போட்டியில் மழை அடிக்கடி எட்டி பார்த்ததால் இந்திய வீரர்கள் களத்துக்கு வருவதும் பின்பு போட்டி நிறுத்தத்தால் வெளியே செல்வதுமாக இருந்தனர். முதலில் 49 ஓவர்களக குறைக்கப்பட்டது. பின்பு 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கடைசியில் 26 ஓவர்கள் குறைக்கப்பட்டு முதல் இன்னிங்ஸ் விளையாடி முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
