India vs Nepal, Quarter Final 1: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த நேபாள் அணிக்கு எதிரான முதல் கால் இறுதிப் போட்டியில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுவும் ஆசிய விளையாட்டு போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
கடைசியாக ரிங்கு சிங் தனது அதிரடி ஆட்டத்தை காட்டவே இந்தியா எளிதாக 202 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 4, 6, 4, 1, 6, 2 என்று ரன்கள் குவித்தார். இறுதியாக ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஷிவம் துபேவும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
கடின் இலக்கை துரத்திய நேபாள் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. முன்வரிசை வீரர்கள் ஓரளவு இரட்டைப்படை எண்களில் ஆட்டமிழக்க பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக் நேபாள் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இந்திய அணியின், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.