Hangzhou 2023: கேனோ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா – 62 பதக்கங்களுடன் 4ஆவது இடம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான கேனோ இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் சலாம் இருவரும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இன்று நடந்த போட்டியில் ஆண்களுக்கான கேனோ இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் சலாம் இருவரும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர். இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், கஜகஸ்தான் வெள்ளியும் கைப்பற்றியது.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீதி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ப்ரீத்தி பவார் அரையிறுதியில் (54 கிலோ) ஆசிய விளையாட்டு சாம்பியனான சீனாவின் சாங் யுவானிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
நேற்று நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த ஆன்சி சோஜன் 6.63 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், பெண்களுக்கான 3000மீ ஸ்டிபிள்சேஸ் போட்டியில் பருல் சௌத்ரி வெள்ளிப் பதக்கம் கைப்பற்ற, ப்ரீதி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இந்திய அணி இதுவரையில் 13 தங்கம், 24 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கத்துடன் 62 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. சீனா 153 தங்கம், 81 வெள்ளி மற்றும் 42 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தமாக 276 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.