IND vs NEP:ருத்ரதாண்டவம் ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் சதம் அடித்து சாதனை–டி20யில் இந்தியா 202 ரன்கள் குவிப்பு!
ஆசிய விளையாட்டு போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
ருதுராஜ் கெய்வாட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவரும் கடைசியாக வந்து அதிரடியாக விளையாடினர். வழக்கம் போல் கடைசி ஓவரில் ரிங்கு சிங் சிக்ஸர்களாக விளாசித்தள்ளினார். 20ஆவது ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 4, 6, 4, 1, 6, 2 என்று ரன்கள் குவித்தார்.
இறுதியாக ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஷிவம் துபேவும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
ICC World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 89 போட்டிகளில் எத்தனை வெற்றி?