ருத்ர தாண்டவம் ஆடிய ரோஹித்! இங்கிலாந்துடன் 2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!
கட்டக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. 305 ரன்கள் இலக்கைத் துரத்திச் சென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 119 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
305 ரன்கள் என்ற கடின இலக்கைத் துரத்திச் சென்ற இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தப் போட்டியையும் தொடரையும் வென்றது. இலக்கைத் துரத்தும் போது கேப்டன் ரோஹித் சர்மா அபார சதம் அடித்தார். அவர் 90 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இவருடன் நல்ல ஒத்துழைப்பு தந்த இளம் வீரர் சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
304 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அந்த அணியன் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆரம்பித்தனர். இதன் விளைவாக முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்பட்டது. அதன் பிறகும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை 50 ஓவர்களில் 304 ரன்களாக உயர்த்தினர். அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட் 65, லியாம் லிவிங்ஸ்டன் 41, ஜோஸ் பட்லர் 34, ஹாரி புரூக் 31, பில் சால்ட் 26, ஆதில் ரஷித் 15, ஜேமி ஓவர்டன் 6, கட் அட்கின்சன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மார்க் வுட் மற்றும் சகிப் மஹ்மூத் இருவரும் டக் அவுட் ஆனார்கள்.
இந்திய பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தவிர முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
IND vs ENG 2nd ODI: அறிமுக போட்டியிலேயே புதிய சாதனை படைத்த வருண் சக்கரவர்த்தி!
ரோஹித் - கில் அதிரடி:
305 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 60 ரன்களில் அவுட்டானார். அதன் பிறகு விராட் கோலி வந்து 5 ரன்கள் எடுத்து அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால், ரோஹித் ஒரு முனையில் அற்புதமான ஆட்டத்தைத் தொடர்ந்து சதம் அடித்தார். அவர் 90 பந்துகளில் 13 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 119 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41*, ரவீந்திர ஜடேஜா 11*, கே.எல். ராகுல் 10 மற்றும் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் 5 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கட் அட்கின்சன், ஆதில் ரஷித் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
விமர்சனங்களை காதில் வாங்காதீர்கள்! கேப்டன் ரோகித்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய அஸ்வின்