Asianet News TamilAsianet News Tamil

தோற்க வேண்டிய மேட்ச்சை ஜெயித்து கொடுத்த கோலி.. இதுதான் நண்பா உன்னோட பெஸ்ட் இன்னிங்ஸ்! ரோஹித் புகழாரம்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை, விராட் கோலி அவரது அபாரமான பேட்டிங்கால் வெற்றியை தேடிக்கொடுத்தார் என்றும் அவரது கெரியரில் சிறந்த இன்னிங்ஸ் இதுவென்று கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டினார்.
 

india captain rohit sharma praises virat kohli for his amazing innings against pakistan in t20 world cup
Author
First Published Oct 23, 2022, 7:26 PM IST

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டி எதிர்பார்க்கப்பட்டதை போலவே பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் 2 மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம்(0) மற்றும் ரிஸ்வான்(4) ஆகிய இருவரையும் அர்ஷ்தீப் சிங் ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகிய அனைவருமே அபாரமாக பந்துவீசினர். ஆனாலும் ஷான் மசூத் (52) மற்றும் இஃப்டிகார் அகமது(51) ஆகிய இருவரின் அபாரமான அரைசதத்தால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மா (4), கேஎல் ராகுல்(4), சூர்யகுமார் யாதவ்(15), அக்ஸர் படேல்(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6.1 ஓவரில் 31 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில் கோலியும் பாண்டியாவும் இணைந்து நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் கோலி அடித்து ஆட, ஹர்திக் பாண்டியா பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டல் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். ஹர்திக் பாண்டியாவிற்கு பெரிய ஷாட் கனெக்ட் ஆகாதபோதிலும், கோலி முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடினார்.

கடைசி 5 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட, 16 மற்றும் 17வது ஓவர்களை வீசிய ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் தலா 6 ரன்களை மட்டுமே வழங்க, இந்திய அணிக்கு அழுத்தம் அதிகமானது. 18வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரின் முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்ற கோலி, கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

6.1 ஓவரில் 31 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற இக்கட்டான சூழலிலிருந்து இந்திய அணியை மீட்டெடுத்து 53 பந்தில் 82 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, மீண்டும் ஒரு முறை சேஸிங்கில் கிங் என்று நிரூபித்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: விராட் கோலி வெறியாட்டம்.. பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

போட்டிக்கு பின் கோலியின் பேட்டிங் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, கோலியும் பாண்டியாவும் அனுபவமான வீரர்கள். இக்கட்டான சூழலில் நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்றனர். இது எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த போட்டியில் ஜெயிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. மோசமான நிலையில் தான் இருந்தோம். விராட் கோலிக்கு ஹேட்ஸ் ஆஃப். இந்தியாவிற்காக கோலி ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று என்று ரோஹித் சர்மா புகழாரம் சூட்டினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios