மகளிர் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. மார்ச் 8ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. சிட்னியில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க மற்றும் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, 11 பந்தில் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரராங்கனையான ஷேஃபாலி வெர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். வெர்மா 15 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அவர் அவுட்டான பிறகு  ரன் வேகம் குறைய தொடங்கியது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வெறும் 2 ரன்னில் நடையை கட்டினார். தீப்தி ஷர்மா கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை கரை சேர்த்தார். அவர் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்தது. 

133 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை அலைஸா ஹீலி மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, மற்ற வீராங்கனைகள் சரியாக ஆடவில்லை. அதிரடியாக ஆடிய ஹீலி, 35 பந்தில் 51 ரன்கள் அடித்து பூனம் யாதவின் பந்தில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஹீலி ஆட்டமிழந்தார். 

ஹீலியின் விக்கெட்டை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்திய பூனம் யாதவ், அதன்பின்னர் ரேச்சல் ஹய்ன்ஸ், எல்லிஸ் பெர்ரி மற்றும் ஜெஸ் ஜோனாசென் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பூனம் யாதவ் வீழ்த்திய 4 விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஹீலி மற்றும் மிடில் ஆர்டரில் கார்ட்னெர் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே இரட்டை இலக்கத்தையே எட்டவில்லை. 

இதையடுத்து முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பூனம் யாதவ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.