ரூ.1200 முதல் ரூ.10000 வரை விற்பனை- 3ஆவது போட்டிக்கு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆஸ்திரேலியா அதிரடியாக தொடங்கியது. அடித்த அடியைப் பார்த்தால் 400 ரன்கள் வரையில் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 200 ரன்கள் கூட எடுக்கவில்லை. இறுதியாக எல்லா விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
பின்னர், 189 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வெற்றி பெறச் செய்தனர். இறுதியாக இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேஎல் ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது.
கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டுகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இதைத் தொடந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் புதிதாக 2 ஸ்டாண்டுகளை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்டுகளுக்கு கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எம் எஸ் தோனி, டுவைன் பிராவோ, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட மற்ற அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில்,இங்கு நடக்கும் 3ஆவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்டின் ஆரம்பவில்லை ரூ.1200 என்றும், அதிகபட்ச விலை ரூ.10000 என்றும் கூறப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 13 ஆம் தேதியே ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் டிக்கெட் பெற முடியாத ரசிகர்கள் ஆஃப்லைன் மூலமாக டிக்கெட் பெற நேற்று இரவு முதல் தூங்காமல் கூட காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு கவுண்டர் டிக்கெட் விற்பனை தொட்ங்கப்பட்டுள்ளது. சினிமாவை விட கிரிக்கெட் மீதான மோகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.