ஃபாலோ ஆன்.ல் இருந்து தப்பியதை கொண்டாடிய கம்பீர், கோலி: கடுப்பில் ரசிகர்கள்
India Vs Australia: காபா டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இந்திய அணி பாலோ ஆன் ஆபத்திலிருந்து தப்பித்தது. பாலோ ஆன் ஆவதில் இருந்து இந்தியா தப்பியதை கோலி, கம்பிர் கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
Border Gavaskar Trophy: பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளின் கடைசி அமர்வில் நிறைய பொழுதுபோக்கு நிகழ்ந்தது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் மைதானத்தில் அசத்தினர். இருவரும் நாளின் கடைசி ஓவர் வரை போராடி, இந்திய அணியை பாலோ ஆன் ஆபத்திலிருந்து காப்பாற்றினர். பாலோ ஆன் தவிர்க்கப்பட்ட பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். கம்பீரின் மகிழ்ச்சியைப் பார்த்தால், இந்திய அணி கவாஸ்கர் டெஸ்டில் வெற்றி பெற்றது போல் இருந்தது.
கொண்டாட்டம் குறித்து ரசிகர்கள் கிண்டல்
இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க நான்கு ரன்கள் தேவைப்பட்டபோது, ஆகாஷ்தீப், பேட் கம்மின்ஸின் பந்தில் ஸ்லிப் பீல்டருக்கு மேல் பவுண்டரி அடித்து அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். பவுண்டரி அடித்த பிறகு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், விராட் கோலியும் டிரஸ்ஸிங் அறையில் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டனர். சக வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கம்பீரின் இந்த எதிர்வினையைப் பார்த்து கிண்டல் செய்து ட்வீட் செய்து வருகின்றனர்.
ஒரு எக்ஸ் பயனர் ஒரு மீம்மைப் பதிவிட்டு, "விழாவுக்குத் தயாராகுங்கள்" என்று எழுதினார். அவரது இந்தப் பதிவு கௌதம் கம்பீரின் மகிழ்ச்சியைக் குறிப்பதாக இருந்தது.
மற்றொரு எக்ஸ் பயனர் கம்பீரின் மகிழ்ச்சியைப் பார்த்து, "டேய், பாலோ ஆனைத் தடுத்தோம், போட்டியை ஜெயிக்கல" என்று எழுதினார். அதோடு, சிரிக்கும் ஈமோஜியையும் இணைத்தார்.
இந்த ரசிகர் விராட் கோலியின் எதிர்வினையைக் கிண்டல் செய்து ஒரு வேடிக்கையான கருத்தைப் பதிவிட்டார். ஆகாஷ்தீப் சிக்ஸர் அடித்தபோது, கோலி பந்தை மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்படியாக பலரும் கம்பீரின் கொண்டாட்டத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.
மானம் காத்த பும்ரா-ஆகாஷ்தீப்
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ்தீப் சிங் 54 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தனர். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் (152) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (101) சதமடித்தனர்.