Sudhir Naik: முன்னாள் இந்திய வீரர், மும்பை கேப்டன் சுதீர் நாயக் சிகிச்சை பலனின்றி காலமானார்!
முன்னாள் இந்திய அணி வீரரும், மும்பை கேப்டனுமான சுதீர் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 1974 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்று விளையாடியவர் சுதீர் நாயக். அந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுதீர் நாயக் பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் ஆட்டமிழந்த அவர், 2ஆவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார்.
IPL 2023: 10 வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓபனிங் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
இதே போன்று 1973-74 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணியில் இடம் பெற்ற சுதீர் நாயக், பரோடா அணிக்கு எதரான போட்டியில் 200 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். அந்த சீசனில் சுனில் கவாஸ்கர், அஜித் வடேகர், திலீப் சர்தேசாய், அசோக் மன்கட் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறாத நிலையில், சுதீர் நாயக் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அடுத்த சீசனில் அவர்கள் இடம் பிடித்த நிலையில், சுதீர் நாயக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடிய சுதீர் நாயக் 4376 ரன்கள் குவித்தார். இதில், ஒரு இரட்டை சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஒரு கடையில் இரண்டு ஜோடி காலுறை (ஷூ மாட்டும் சாக்ஸ்) திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், பிசிசிஐ மற்றும் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தாயாகம் திரும்பினார். கடந்த 1978 ஆம் ஆண்டு முடிவடைந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு நாயக் பயிற்சிக்கு திரும்பினார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சுதீர் நாயக் மும்பையின் தேர்வுக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். அதன் பிறகு மும்பை வான்கடே மைதானத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது வழுக்கி விழுந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி மும்பை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சுதீர் நாயக்கிற்கு (78) ஒரு மகள் இருக்கிறார். சுதீர் நாயக்கின் மறைவிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர் உள்பட இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.