இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டதை கண்டித்து ரசிகர்கள் கவுதம் கம்பீரை ஒரு முட்டாள் என தெரிவித்துள்ளனர்.

Fans Condemn Gautam Gambhir For Removing Sai Sudarshan 2nd Test: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூலை 2) தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார்.

சாய் சுதர்சன் நீக்கம்

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் சொதப்பிய ஷர்துல் தாக்கூர் நீக்கபப்ட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இடம்பிடித்துள்ளார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் நீக்கப்பட்டு மற்றொரு தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிய சாய் சுதர்சன் சரியாக விளையாடவில்லை என நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாய் சுதர்சனுக்கு காயமா?

முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சாய் சுதர்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்பு காயம் குணமடைந்த நிலையிலும் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம் கம்பீருக்கு மனமில்லை

சாய் சுதர்சனுக்கு காயம் என்றால், ஏன் அவரை முதல் டெஸ்ட் அணியில் எடுத்தீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆரம்பத்திலிருந்தே சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டு வர விரும்பவில்லை என்றும், கேப்டன் சுப்மன் கில்லின் வற்புறுத்தலால் தான் அவர் சேர்க்கப்பட்டதாகவும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பீர் ஒரு முட்டாள்

''ஒரு டெஸ்ட் போட்டி பேட்டிங்கை வைத்து நீக்கினால் பிறகு ஏன் சாய் சுதர்சனை முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய ரசிகர்கள் கவுதம் கம்பீர் ஒரு முட்டாள்'' என்று மிகக் கடுமையாக சாடியுள்ளனர். கவுதம் கம்பீர் சாய் சுதர்சனுக்கு செய்தது அநியாயம் என்று கூறியுள்ள ரசிகர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாத கருண் நாயருக்கு ஏன் 2வது டெஸ்ட்ட்டில் வாய்ப்பு அளிக்கப்பட்டது? என்றும் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் போது, ஒரு இன்னிங்ஸில் டக் அவுட் ஆனதற்காக சாய் சுதர்சனை நீக்குவது நியாயமற்றது என்றும், இளம் வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். சாய் சுதர்சன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், இந்த நீக்கம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மேலும் கோபத்தை தூண்டியுள்ளது. இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது

முன்னதாக 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு இந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து பவுலர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒருபக்கம் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, மறுபக்கம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். ஆனாலும் கே.எல்.ராகுல் 26 பந்துகளை சந்தித்து 2 ரன்களை எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் போல்டானார்.

ஜெய்ஸ்வால் அரைசதம்

மறுபக்கம் ஜெய்ஸ்வால் அதிரடியான ஷாட்களை விளையாடி பவுண்டரிகளை ஓட விட்டார். பின்பு வந்த கருண் நாயரும் சில அற்புதமான கவர் டிரைவ்களை அடித்தார். நன்றாக விளையாடிய கருண் நாயர் 50 பந்தில் 31 ரன் எடுத்து கார்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். அடித்து ஆடிய ஜெய்ஸ்வால் (69 பந்தில் 62 ரன்) சூப்பர் அரை சதம் விளாசினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 98/2 என்ற நிலையில் உள்ளது.