இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் கண்ணீருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால், இந்தப் படம் லார்ட்ஸ் டெஸ்டின் போது எடுக்கப்பட்டது, மான்செஸ்டர் டெஸ்டில் அல்ல.
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இருந்து நீக்கப்பட்ட்டுள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பிய அவரது பயணம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் 2016 க்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கருண் நாயர், பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் மற்றும் லண்டனில் நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றார். இருப்பினும், 33 வயதான கருண், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறி, தனது தேர்வை நியாயப்படுத்தவில்லை.
கர்நாடக பேட்ஸ்மேனின் ரன்கள் 0, 20, 31, 26, 40, மற்றும் 14 என மொத்தம் 131 ரன்களை 21.83 சராசரியுடன் எடுத்தார். அவர் தனது நல்ல ஆரம்பங்களை பெரிய இன்னிங்ஸ்களாக மாற்றத் தவறியதால், இந்திய அணி நிர்வாகம் அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கி, சாய் சுதர்சனை மீண்டும் அணியில் சேர்த்தது.
கருண் நாயரின் வைரல் போட்டா
மான்செஸ்டர் டெஸ்டில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்ட நிலையில், அவர் கண்ணீருடன் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான அந்தப் படத்தில், கருண் நாயருக்கு சக வீரரான கே.எல். ராகுலால் ஆறுதல் கூறுவதைக் காணலாம். ராகுல் நாயரின் தோளில் கைவைத்து ஆறுதல் கூறும் காட்சி அந்தப் படத்தில் உள்ளது.
மான்செஸ்டரில் இருந்து நீக்கப்பட்டதால் கருண் நாயர் கண்ணீர் விட்டதாகவும், கே.எல். ராகுல் அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாகப் பரவியது.
உண்மை என்ன?
ஆனால், கண்ணீர் சிந்திய கருண் நாயரின் வைரல் படத்திற்குப் பின்னால் ஒரு உண்மை உள்ளது. கருண் நாயருக்கும் கே.எல். ராகுலுக்கும் இடையிலான அந்த தருணம் மான்செஸ்டர் டெஸ்டின்போது நடந்தது அல்ல, அது லார்ட்ஸ் டெஸ்டின்போது எடுக்கப்பட்ட படம். படத்தில், இரண்டு கர்நாடக கிரிக்கெட் வீரர்களும் லார்ட்ஸ் பால்கனியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு தனித்துவமான பால்கனி உள்ளது. அது வைரல் படத்தின் பின்னணியில் தெளிவாகத் தெரிகிறது. தற்போது 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் டிரஸ்ஸிங் ரூம் மற்றும் வீரர்களின் பால்கனி முற்றிலும் மாறுபட்ட அமைப்பு கொண்டது.
எனவே, கருண் நாயருக்கும் கே.எல். ராகுலுக்கும் இடையிலான இந்த உணர்ச்சிகரமான தருணம் மான்செஸ்டர் டெஸ்டின் போது நடக்கவில்லை. லார்ட்ஸில் நடந்தது என்பது உறுதியாகிறது.
கருண் நாயர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா?
கே.எல். ராகுல் கருண் நாயருக்கு ஆறுதல் கூறிய வைரல் படத்திற்கு மத்தியில், நடப்பு டெஸ்ட் தொடரில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், உண்மை என்னவென்றால், கருண் நாயர் தனது ஓய்வு முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அவர் வரவிருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் கர்நாடக மாநில அணிக்கு விளையாட உள்ளார். கடந்த சீசனில், நாயர் விதர்பாவுக்காக விளையாடினார். ரஞ்சி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் தனது சிறந்த ஆட்டத்தைக் காட்டியதால்தான் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.
