இங்கிலாந்து டெஸ்ட் தொரில் மோசமாக பேட்டிங் செய்யும் கருண் நாயரை இந்திய அணியில் இருந்து நீக்கி விட்டு தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Karun Nair's Poor Batting Against England Test Series: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால் (13 ரன்), சுப்மன் கில் (16) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த டெஸ்ட்டிலாவது அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயரும் நல்ல தொடக்கம் அளித்து 40 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஜோ ரூட்ட்டின் சூப்பர் கேட்ச்சில் அவுட்டானார்.
கருண் நாயர் சொதப்பல் பேட்டிங்
சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். 2வது இன்னிங்சில் 20 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார்.
வாய்ப்பை வீணடிக்கும் கருண் நாயர்
பாக்கிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் சிறப்பாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் அங்கும் அவர் சொதப்பினார். முதல் இன்னிங்சில் 31 ரன்களுக்கும், 2வது இன்னிங்சில் 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இப்போது லார்ட்ஸில் நடக்கும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சிலும் 40 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை மீண்டும் ஒருமுறை கோட்டை விட்டுள்ளார்.
சாய் சுதர்சன் நீக்கம்
முதல் டெஸ்ட்டில் அறிமுகமான சாய் சுதர்சன் சரியாக விளையாடவில்லை என்று அடுத்த போட்டிகளில் கழட்டி விடப்பட்டார். அதே வேளையில் கருண் நாயருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவர் வீணடித்துள்ளார். சாய் சுதர்சன் போன்ற திறமையான இளம் வீரர்களை நீக்கிவிட்டு, கருண் நாயருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது தவறு என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காத்துக் கிடக்கும் இளம் வீரர்கள்
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்தவர் என்ற பெருமையுடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சாதனையுடன் தான் கருண் நாயர் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றார். ஆனால் விளையாடிய 5 இன்னிங்சில் ஒரு இன்னிங்சில் கூட அவர் அரை சதம் அடிக்கவில்லை. இந்திய அணியில் இடம்பிடிக்க ஏராளமான இளம் வீரர்கள் தவம்போல் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் கிடைத்த வாய்ப்பையும் வீணடித்து வரும் கருண் நாயருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஆவேசம்
இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் சரியாக கால்களை நகர்த்தி விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ''3வது வரிசையில் இறங்கி ஆடுவதற்கு கருண் நாயர் சரியான வீரர் இல்லை. இவருக்கு பதிலாக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்'' என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்து இருந்தார். ரசிகர்களும் இப்போது அந்த கருத்தை எதிரொலிக்கத் தொடங்கி விட்டனர்.
