2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்..? ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டனின் லாஜிக்
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாகவே டெயிலெண்டர் ககிசோ ரபாடா தான் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே அந்த ரன் கூட அடிக்காமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 38 ரன்கள் அடித்தார். ஆலி போப் 23 ரன்களும்,சீனியர் வீரர் ஜோ ரூட் 9 ரன்களும் மட்டுமே அடித்தனர். நன்றாக ஆடிய பேர்ஸ்டோ 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, 147 ரன்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 173 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சதமடித்த பென் ஃபோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 113 ரன்களை குவித்தார்.
ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் சதங்களால் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை விட 264 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. விராட் கோலிக்கு கபில் தேவின் உருப்படியான அட்வைஸ்
264 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் 2வது இன்னிங்ஸிலும் மோசமாக பேட்டிங் ஆடி வெறும் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-1 என தொடரை சமன் செய்தது.
பேட்டிங்கில் சதம், பவுலிங்கில் 2 இன்னிங்ஸிலும் தலா 2 விக்கெட் வீதம் மொத்தம் 4 விக்கெட் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.