Asianet News TamilAsianet News Tamil

ENG vs IND: படுமோசமாக சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! 2வது ODIயில் 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

england beat india by 100 runs in second odi and level the series by 1 1
Author
London, First Published Jul 15, 2022, 6:55 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியில் காயத்தால் ஆடாத விராட் கோலி இந்த போட்டியில் ஆடினார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடன் கர்ஸ், ரீஸ் டாப்ளி.

இதையும் படிங்க - புஜாராவின் பவுலிங் திறமையை இந்திய அணி யூஸ் பண்ணாம மிஸ் பண்ணிடுச்சே..! என்ன அருமையா வீசுறார்.. வைரல் வீடியோ

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்(23) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (38) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராயை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அதன்பின்னர் பேர்ஸ்டோ, ரூட்(11), ஸ்டோக்ஸ்(21) ஆகிய மூவரையும் யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்தினார். கேப்டன் ஜோஸ் பட்லர் 4 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

லிவிங்ஸ்டோன் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 148 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் மொயின் அலியும் டேவிட் வில்லியும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். இவர்கள் இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர்.  மொயின் அலியை 47 ரன்களுக்கு சாஹல் வீழ்த்த, டேவிட் வில்லியை 41 ரன்களுக்கு பும்ரா வீழ்த்தினார். 49 ஓவரில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா ரன்னே அடிக்காமலும், தவான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். நல்ல ஷாட்டுகள் ஆடி நன்றாக தொடங்கிய விராட் கோலி, 16 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றினார். 

சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அவர்களது இன்னிங்ஸை நன்றாக தொடங்கினர். ஆனால் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சூர்யகுமார் 27 ரன்களும், பாண்டியா மற்றும் ஜடேஜா தலா 29 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஷமி 23 ரன்கள் அடித்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 38.5 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - ஐசிசி டி20 தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி டாப் 5க்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ்..! அபரிமிதமான முன்னேற்றம்

இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரீஸ் டாப்ளி, 9.5 ஓவர்கள் பந்துவீசி வெறும் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 1-1 என ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios