சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி 5ம் இடத்தை பிடித்துள்ளார். 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நம்பிக்கைக்குரிய மிடில் ஆர்டர் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிறைய ஸ்கோர் செய்ததன் விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யகுமார் யாதவ்.

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனக்கு ஆட கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.

இதையும் படிங்க - ரோஹித் சர்மா மாபெரும் சாதனை.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாப் இந்திய வீரர்..! சர்வதேச அளவில் 4ம் இடம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அருமையாக ஆடினார். குறிப்பாக 3வது டி20 போட்டியில் அவர் ஆடிய விதம் முன்னாள் ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. எதிரணியான இங்கிலாந்தை மிரட்டிவிட்ட இன்னிங்ஸ் அது. 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி விரட்டியபோது, தனி ஒருவனாக வெறித்தனமாக பேட்டிங் ஆடி அந்த இலக்கை விரட்டிய சூர்யகுமார் யாதவ், 48 பந்தில் சதமடித்தார். 55 பந்தில் 117 ரன்களை குவித்தார். 19வது ஓவரில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியடைந்தது.

சூர்யகுமார் யாதவின் அந்த மிரட்டலான இன்னிங்ஸுக்கு பிறகு, ஐசிசி டி20 தரவரிசையில் 44 இடங்கள் முன்னேறி 5ம் இடத்தை பிடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இது அபரிமிதமான முன்னேற்றம். ஒரு தரமான இன்னிங்ஸால் 44 இடங்கள் முன்னேறி நேரடியாக டாப் 5க்குள் நுழைந்தார் சூர்யகுமார் யாதவ்.

இதையும் படிங்க - ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் உள்ளனர். 3ம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமும், 4ம் இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலானும் உள்ளனர்.5ம் இடத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். டாப் 10 இடங்களில் வேறு இந்திய வீரர்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித், கோலி, ராகுல், ரிஷப் பண்ட் என யாருமே டாப் 10 இடங்களில் இல்லை.