IPL 2023: பவுலிங், ஃபீல்டிங் இரண்டிலும் பட்டைய கிளப்பிய வாஷிங்டன் சுந்தர்..!SRH-க்கு எளிய இலக்கை நிர்ணயித்த DC
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 144 ரன்கள் அடித்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இந்த 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.
முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி 2வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், அக்ஸர் படேல், அமான் கான், ரிப்பல் படேல், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, ஹாரி ப்ரூக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வாஷிங்டன் சுந்தர், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, அதன்பின்னர் வார்னரும் மிட்செல் மார்ஷும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 15 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் தொடக்க வீரர் வார்னருடன் சர்ஃபராஸ்கான் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த நிலையில், 8வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், அந்த ஓவரில் வார்னர்(21), சர்ஃபராஸ் கான்(10) மற்றும் அமான் கான் (4) ஆகிய மூவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்திலிருந்து டெல்லியை வெளியேற்றினார். 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி கேபிடள்ஸ் அணி.
அதன்பின்னர் மனீஷ் பாண்டே மற்றும் அக்ஸர் படேல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி ஓரளவிற்கு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 34 ரன்கள் அடித்து 18வது ஓவரில் அக்ஸர் படேல் ஆட்டமிழக்க, கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்கும் முனைப்பில் இருந்த மனீஷ் பாண்டேவை, அடுத்த ஓவரில் அபாரமான த்ரோவின் மூலம் ரன் அவுட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். மனீஷ் பாண்டேவும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவரில் 144 ரன்கள் அடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 145 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.