IPL 2023: செம சோம்பேறிங்க அவன்.. டீமை விட்டு தூக்கியது சரிதான்.! பிரித்வி ஷாவை செமயா விளாசிய முன்னாள் வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட நிலையில், அவரது செயல்பாட்டை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் படுமோசமாக விளையாடி முதல் 6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, 2வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று சன்ரைசர்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஓபனிங்கில் படுமோசமாக ஆடி 6 போட்டிகளில் 2 முறை டக் அவுட்டாகி, மொத்தமாகவே 47 ரன்கள் மட்டுமே அடித்த பிரித்வி ஷா அணியிலிருந்து நீக்கப்பட்டு மிடில் ஆர்டரை பலப்படுத்தும் விதமாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார்.
மிகத்திறமையான பேட்ஸ்மேனான பிரித்வி ஷா. பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பார் பிரித்வி ஷா. ஆனால் இந்த சீசனில் அவர் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் பிரித்வி ஷா அடித்த ரன்கள் - 13, 12, 7, 0, 15 மற்றும் 0 ஆகும். மொத்தமாகவே வெறும் 47 ரன்கர்ள் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் வெறும் 117 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். ஃபீல்டிங் கூட செய்யாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடுகிறார். அந்த வேலையையும் ஒழுங்காக செய்யவில்லை.
இதையடுத்து சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து பேசிய நியூசிலாந்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டௌல், பிரித்வி ஷா அவரது பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இப்போதைக்கு அவர் சொதப்புவதால் அவரை நீக்கியது சரிதான். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வார்னர் ரன்னுக்கு அழைக்க, வேகமாக ஓட முடியாமல் பிரித்வி ஷா ரன் அவுட்டானார். டெல்லி அணி ஃபீல்டிங் செய்யும்போது பென்ச்சில் கடைசியாக உட்கார்ந்துகொள்கிறார். பின்னர் சோம்பேறித்தனமாக பேட்டிங் ஆடவருகிறார். ஓடக்கூட முடியாமல் ஓடுகிறார். இதுமாதிரியான சின்ன விஷயங்கள் ஆட்டத்தில் மிக முக்கியம் என்று சைமன் டௌல் விமர்சித்துள்ளார்.