IPL 2023: அடுத்த கேப்டன் யார்..? சிஎஸ்கே சி.இ.ஓ தகவல்

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்று சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து கூறியுள்ளார்.
 

csk ceo kasi viswanathan speaks about next captain of the franchise after ms dhoni in ipl

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. 4 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற 2வது அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. தோனியின் சிறப்பான கேப்டன்சியால் தான் சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதோனி ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார். ஐபிஎல்லிலுமே அவர்  அடுத்த சீசனில் ஆடுவது சந்தேகம். 2023ல் நடக்கும் ஐபிஎல் 16வது சீசனே அவரது கடைசி சீசனாக இருக்கும்.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள்

எனவே தோனி விலகுவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதனால் தான் கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கியது சிஎஸ்கே அணி. ஆனால் அந்த முயற்சி பலனளிக்காததால், சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளால் ஜடேஜா கேப்டன்சியிலிருந்து விலக, தோனியே மீண்டும் கேப்டனானார்.

அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் இருந்துவந்தது. சிஎஸ்கே அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்ட இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டையே கேப்டனாக்கலாம் என சில முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினர். அவரும் உள்நாட்டு போட்டிகளில் மகாராஷ்டிரா அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இளம் வீரர் என்பதால் நீண்டகாலம் கேப்டன்சியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் கேப்டனாவதற்கான வாய்ப்புள்ளது.

ஆனால் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி கொடுத்து எடுத்த பின், ஸ்டோக்ஸும் கேப்டன்சிக்கான வீரராக பார்க்கப்படுகிறார். ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என்பதால், சாம் கரனை எடுக்க முயன்ற சிஎஸ்கே, தொகை அதிகமாக போனதால் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்தது.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்

சமகாலத்தின் தலைசிறந்த ஆல்ரவுண்டரும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை எடுத்தது கேப்டன் தோனிக்கு பெரிய மகிழ்ச்சி. பென் ஸ்டோக்ஸ் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடுவாரா, அனைத்து சீசன்களிலும் ஆடுவாரா என்பதெல்லாம் சந்தேகம். அவரது கடந்த கால வரலாறை பார்த்தாலே அது தெரியும். எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு.

இதுகுறித்து பேசிய சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என்பதால் பென் ஸ்டோக்ஸை எடுத்தோம். ஸ்டோக்ஸை எடுத்ததில் தோனிக்கு பெரிய மகிழ்ச்சி. கேப்டன்சிக்கான இடம் காலியாக இருக்கிறது. ஆனால் அதுகுறித்து தோனி சரியான நேரத்தில் அவரே முடிவெடுப்பார் என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios