IPL 2023: சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் செயல்படலாம்..? தோனியா ஸ்டோக்ஸா..? கிறிஸ் கெய்ல் அதிரடி
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி - ஸ்டோக்ஸ் இருவரில் யார் செயல்படலாம் என்று கிறிஸ் கெய்ல் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. 4 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற 2வது அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. தோனியின் சிறப்பான கேப்டன்சியால் தான் சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதோனி ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார். ஐபிஎல்லிலுமே அவர் அடுத்த சீசனில் ஆடுவது சந்தேகம். 2023ல் நடக்கும் ஐபிஎல் 16வது சீசனே அவரது கடைசி சீசனாக இருக்கும்.
எனவே தோனி விலகுவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதனால் தான் கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கியது சிஎஸ்கே அணி. ஆனால் அந்த முயற்சி பலனளிக்காததால், சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளால் ஜடேஜா கேப்டன்சியிலிருந்து விலக, தோனியே மீண்டும் கேப்டனானார்.
அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் இருந்துவந்தது. சிஎஸ்கே அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்ட இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டையே கேப்டனாக்கலாம் என சில முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறிவருகின்றனர். அவரும் உள்நாட்டு போட்டிகளில் மகாராஷ்டிரா அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். இளம் வீரர் என்பதால் நீண்டகாலம் கேப்டன்சியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் கேப்டனாவதற்கான வாய்ப்புள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி கொடுத்து எடுத்த பின், ஸ்டோக்ஸும் கேப்டன்சிக்கான வீரராக பார்க்கப்படுகிறார். ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என்பதால், சாம் கரனை எடுக்க முயன்ற சிஎஸ்கே, தொகை அதிகமாக போனதால் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்தது.
சமகாலத்தின் தலைசிறந்த ஆல்ரவுண்டரும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை எடுத்தது கேப்டன் தோனிக்கு பெரிய மகிழ்ச்சி. பென் ஸ்டோக்ஸ் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடுவாரா, அனைத்து சீசன்களிலும் ஆடுவாரா என்பதெல்லாம் சந்தேகம். அவரது கடந்த கால வரலாறை பார்த்தாலே அது தெரியும். எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு.
தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்பதால், அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியபின் புதிய கேப்டனை நியமிப்பதைவிட, அவர் ஆடும்போதே அடுத்த கேப்டனை வளர்த்துவிட்டு செல்வதுதான் சரியாக இருக்கும். எனவே அந்தவகையில் இந்த சீசனிலேயே புதிய கேப்டன் நியமிக்கப்படலாம். ஆனால் இதுகுறித்து தோனி தான் முடிவெடுப்பார் என்று ஏற்கனவே சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், ஐபிஎல் 16வது சீசனில் தோனி - ஸ்டோக்ஸ் ஆகிய இருவரில் யார் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று கிறிஸ் கெய்லிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கெய்ல், கண்டிப்பாக தோனி தான். தோனி ஆடும்வரை அவர் தான் கேப்டனாக இருக்கவேண்டும். தோனி - ஸ்டோக்ஸ் என்ற இருபெரும் கிரிக்கெட் மூளைகள் டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலம். குறிப்பாக இளம் வீரர்கள் ஸ்டோக்ஸிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். கேப்டன்சியை பொறுத்தமட்டில் தோனிக்கு மதிப்பளித்து, அவருக்கு கீழ் ஸ்டோக்ஸ் ஆடவேண்டும் என்று கெய்ல் கூறியுள்ளார்.